பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
ஈரோடு: பல ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்துள்ள முனியப்ப சுவாமி கோவிலில்,
திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி கிராமம், ஊஞ்சப்பாளையத்தில் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. கிராம காவல் தெய்வமாக, இன்றளவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.முதல்வரின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், தினமும் காலை, ஏழு மணி முதல், ஒன்பது மணிக்குள், ஒரு கால பூஜை நடக்கிறது. கோவிலில், நான்கு ஆண் முனியும், ஒரு பெண் முனியும், கருப்பண்ண சுவாமி சிலைகளும் உள்ளன.ஆண்டுதோறும், ஆடி பெருக்கு முடிந்த பின் வரும் வியாழக்கிழமை, இக்கோவிலில் கிடா வெட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிற நாட்களில், கோவிலில் கிடா வெட்ட அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும்,
சிவராாத்திரி பூஜை, அதாவது தை மாதம் அறுவடை முடிந்த பின், நெல்மணிகளை பெற்று,
அரிசியாக்கி, பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையல் இடுகின்றனர். பின்னர், பொங்கலை
உருண்டையாக பிடித்து, கிழங்கு மற்றும் பயிர் வகைகளை, உப்பு போடாமல் சேர்த்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.கால மூப்பின் காரணமாகவும், திருப்பணிகள் செய்யாததாலும், கோவிலில் சுவாமி சிலைகள் சிதிலமடைந்து உள்ளன. எந்த நேரத்திலும், சுவாமி சிலைகள் இடிந்து, கீழே விழக்கூடும் என்ற அபாயம் தொடர்கிறது. கன மழை பெய்யும் பட்சத்தில், சுவாமி சிலைகள் பாதிக்கப்படைய கூடும்.சுவாமி சிலைகள் சிதிலமடைந்து வருவதால், பக்தர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள, அதிக செலவாக கூடும். செலவை ஏற்க முடியாத நிலையில், மக்கள் உள்ளனர். பருவ மழை பொய்த்ததால், மக்களால் கோவிலை பராமரிக்கவோ, திருப்பணிகளை மேற்கொள்ளவோ முடியாத நிலை உள்ளது.எனவே, இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத்துறை மூலம், அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு
செய்ய வேண்டும், என்று பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து
எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்டோரிடம் மனு கொடுக்க தயாராகி வருகின்றனர்.