பதிவு செய்த நாள்
23
ஆக
2014
02:08
திருப்பூர் : திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீர ராகவப் பெருமாள் கோவில்கள், நூற்றாண்டு பழமை வாய்ந்தவை. ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில், ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. மேலும், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி சன்னதி, தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வடக்கு (சொர்க்கவாசல்) மற்றும் தெற்கு பகுதியில், கோபுரத்துடன் கூடிய நுழைவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வெளிப்பிரகாரத்தில், கிணத்துக்கடவு பகுதியில் இருந்து வரவழைக்கப்படும் வெண்ணிற கற்கள் பதிக்கப்பட உள்ளன. மொத்தம் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள், தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. கும்பாபிஷேக விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்த, கோவில் திருப்பணிக்குழு, இன்று (ஆக., 23) காலை 9.00 மணிக்கு கூடுகிறது. கோவில் செயல் அலுவலர் சிவராமசூரியனிடம் கேட்டபோது,""திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணி நடைபெற்று வருகிறது. திருப்பணிக்குழு பரிந்துரையை ஏற்று, வரும் டிச., 1ல், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது, என்றார்.