சென்னை : பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 42ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடையுடன் நடைபாதையாக பெசன்ட்நகரை வந்தடைந்தனர். மாலை பிரமாண்ட கொடி அன்னையின் தேருடன் வீதிகளில் பவனி வந்தது. அதை தொடர்ந்து மாலை 5:45 மணிக்கு, 75 அடி உயர வெண்கல கொடிமரத்தில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவின் அருளை பெற்றனர். இதைஅடுத்து, சிறப்பு திருபலி நிகழ்?ச்சி நடந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெசன்ட்நகரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.