பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
ஆர்.கே.பேட்டை : லட்சுமி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. வீரமங்கலம் அடுத்த, ராமராஜகண்டிகை கிராமத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2002ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், கோவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று காலை 7:30 மணியளவில், யாகசாலையில், புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் சிலைக்கும், நவகிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணியளவில், உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், வீரமங்கலம், மரிக்குப்பம், பந்திகுப்பம், மகன்காளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.