பதிவு செய்த நாள்
24
செப்
2014
11:09
திருப்பதி: திருமலையில், நேற்று காலை, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் விமரிசையாக நடைபெற்றது.திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுக்கு, நான்கு முறை, அதாவது, வைகுண்ட ஏகாதசி, உகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் விழாக்களின் முன் வரும் செவ்வாய்க்கிழமை, வைகானச ஆகம விதிப்படி, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கும்.திருமலையில், வரும், 26ம் தேதி முதல் பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால், அதற்கு முந்தய செவ்வாய்க்கிழமையான நேற்று காலை, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.ஏழுமலையான் கோவில் கருவறைக்குள் உள்ள, உற்சவ சிலைகள், பூஜை பொருட்கள் எல்லாம் வெளியே கொண்டு வரப்பட்டு, ஏழுமலையானை தண்ணீர் புகாத பட்டு வஸ்திரம் கொண்டு போர்த்தினர்.பின், கோவில் தரை, தளம், சுவர், மேற்கூரை, கோபுரங்களை தண்ணீர் விட்டு கழுவினர். பின், கிருமிநாசினிகளான கஸ்தூரி மஞ்சள், குங்குமம், புனுகு, பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி, கோராஜனம், சந்தனம் முதலியவை பூசப்பட்டு, கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. பின், ஏழுமலையான் மேல் போர்த்தி இருந்த போர்வை நீக்கப்பட்டு, உற்சவ சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்டன. மதியம், 12:00 மணிக்கு, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். புதிய ஊஞ்சல் மண்டபம் திருமலை ஏழுமலையான் கோவில் அக்னி மூலை, மிக குறுகலாக உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் ரததோற்சவத்தின் போது, தேரை திருப்ப மிகவும் சிரமமாக இருந்தது.அதனால், ஊஞ்சல் மண்டபத்தை, அங்கிருந்து அகற்றி, கோவில் முன்புறம், 100 மீட்டர் நகர்த்தப்பட்டுள்ளது. கனமழைதிருமலையில், நேற்று காலை, ஒரு மணிநேரம் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால், கோவில் முன் மழை நீர் பெருக்கெடுத்தது.பிரம்மோற்சவ சமயத்தில், திருமலையில், மழை பெய்து, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய கோயில்கள் :