கோவை : மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் நேற்று பேரூர் நொய்யல் படித்துறையில் தர்ப்பணம் செய்தனர். காஞ்சிமாநதி என்றழைக்கப்படும் நொய்யலில், மஹாளய அமாவாசை திதியன்றும், ஆடி மாதம் வரும் அமாவாசை திதியன்றும், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பேரூர் படித்துறையில் ஏராளமானோர் திரண்டு, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதற்காக பேரூர் பட்டீசுவரர் கோவில் நிர்வாகத்தினர், சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அமாவாசையையொட்டி பேரூர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். நொய்யல் படித்துறை பகுதி முழுமையாக துார்வாரப்படாததால், அங்கு நாணல்கள் ஏராளமாக வளர்ந்து படித்துறையை ஆக்கிரமித்துள்ளன. படித்துறையையொட்டி ஏராளமான கழிவுகள் நிரம்பி இருந்தன. அவற்றை பொருட்படுத்தாத பக்தர்கள், கழிவுகளுக்கிடையே இறங்கி நொய்யலில் வழிபாடு செய்தனர்.