பதிவு செய்த நாள்
06
அக்
2014
10:10
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆள் உயர மண் பீடம் அமைத்து, செம்மறி ஆடுகளின் தலையை படையலாக படைத்து, அதன் கறியை சாதாரண தண்ணீரில் வேகவைத்து உண்ணும் ஆண்களுக்கான விநோத வழிபாடு நடந்தது.கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லை பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் புரட்டாசி பவுர்ணமியை ஒட்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத வழிபாடு நடந்தது.
சிலை வழிபாடு இல்லாத இக்கோயிலில் இரவு 9 மணிக்கு திரண்ட ஆண்கள் இரவு 12 மணிக்குள் மணலால் ஆள் உயர பீடத்தை எழுப்பினர். பின்னர், 31 செம்மறி ஆடுகளை பலி கொடுத்து, அதன் தலைகளை பீடத்தை சுற்றி வரிசையாக அடுக்கி வைத்தனர். இறைச்சியை மசாலா கலக்காமல் சாதாரண தண்ணீரில் வேகவைத்து சமைத்தனர். பச்சரிசியில் சாதம் சமைத்து அதில் ஆளுக்கு ஒரு உருண்டை வீதம் பனை ஓலையில் வைத்து வழங்கப்பட்டது. மீதமுள்ள இறைச்சி பீடத்தை சுற்றிலும் குழிதோண்டு புதைக்கப்பட்டது. விளக்கின் வெளிச்சத்தில் இரவு முழுவதும் இந்த விநோத வழிபாடு நடந்தது. இவ்விழாவில் பெண்களுக்கு அனுமதி இல்லை. முதல்நாடு மட்டுமின்ற குடிக்கினியான், பாப்பாங்குளம் உட்பட சுற்றுவட்டார கிராமத்தை ஆயிரக்கணக்கான ஆண்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். இந்த விநோத வழிபாடு 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.