சபரிமலை: சபரிமலை மேல்சாந்திக்கான நேர்முகத்தேர்வு, நாளை திருவனந்தபுரம் தேவசம்போர்டு அலுவலகத்தில் துவங்குகிறது. சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை 1 ம் தேதி முதல் அடுத்த ஐப்பசி கடைசி தேதி வரை ஒரு மேல்சாந்தி பணியமர்த்தப்படுவார். அவரை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்வு நடக்கும். தேவசம்போர்டின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மலையாள பிராமணர்கள் இதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். தேவசம்போர்டு தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், ஆணையர், சபரிமலை தந்திரிகள் அடங்கிய குழு, தேர்வுக்கு வருவோரின் வேத அறிவை சோதித்து, 10 க்கும் மேற்பட்டவர்கள் பெயர் பட்டியலை தயாரிக்கும். இதற்காக, கேரள ஐகோர்ட் சில நெறிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவர் ஐப்பசி முதல் தேதி சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதே முறையில், மாளிகைப்புறம் கோயிலுக்கும் மேல்சாந்தியும் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுவோர் ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கியிருக்க வேண்டும். மேல்சாந்தி பதவிக்கு நேர்முகத்தேர்வு நாளை துவங்கி, நாளை மறுநாள் வரை நடக்கிறது. தேர்வானவர்கள் பட்டியல் அக்.,13 ல் வெளியிடப்படும்.