கோவை : கந்தர் சஷ்டி திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சத்ருசம்ஹாரவேள்வி நடந்தது.முருகனின் ஏழாவது படைவீடாக போற்றப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த வெள்ளியன்று கந்தர்சஷ்டி விழா காப்புகட்டும் நிகழ்ச்சியோடு துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, காலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. முதலில் கந்தர்சஷ்டியையொட்டி, கோவில் பசுமாடுகளை அழைத்து கோபூஜையை சிவாச்சாரியார்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், மண்எடுத்தல், சுவாமிக்கு 16 வகை திரவியங்களில் திரவிய அபிஷேகம் நடந்தது. நிறைவாக பாலபிஷேகம் நடந்தது. பின், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியருளினார். இதையடுத்து, கோவில் மகாமண்டபத்தில் சத்ருசம்ஹார வேள்வி நடந்தது. கந்தர்சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி அக்.,29 மாலை 3.00 மணிக்கு நடக்கிறது.