பதிவு செய்த நாள்
06
நவ
2014
11:11
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்றுமுன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போனறவைகளால் அபிசேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
ஐப்பசி பவுர்ணமி விழா : ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் அன்னாபிசேக பூஜை நடப்பது வழக்கம். அதன்படி, கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், இன்று ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை சிறப்புவேள்வி பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு சிறப்பு அபிசேக பூஜையும், அதனை தொடர்ந்து, சிவலோகநாதருக்கு அன்னாபிசேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.