பதிவு செய்த நாள்
10
நவ
2014
12:11
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் கல்வராயன் மலைத் தொடரில், கொப்பு கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புரட்டாசி மாத சனிக் கிழமைகளில், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக் கிழமையில், மூலவர் கொப்பு கொண்ட பெருமாள் ஸ்வாமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. குழந்தை வரம், திருமணத் தடை, குடும்ப முன்னேற்றம் வேண்டினால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.பெருமாளுக்கு, காணிக்கையாக தங்களது வீடுகளில் வளர்க்கும், "காளை கன்றுகளை, கோவிலுக்கு நேர்ந்து விடுகின்றனர். மூன்றாவது சனிக் கிழமையில், பெருமாளுக்கு நேர்ந்து விட்ட காளை மாடுகளை, கோவிலுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதங்களில், நூற்றுக் கணக்கான காளை மாடுகளை, பக்தர்கள், கோவிலுக்கு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தவிர, உடலில் உள்ள நோய்கள், குடும்ப பிரச்னைகள், கடன் தொல்லை நீங்க, முள் படுக்கை போன்ற நேர்த்தி கடனும் செலுத்துவதை காண முடிகிறது.கொப்பு கொண்ட பெருமாள் ஸ்வாமி உள்ள, மலைக் குன்று கூர்மையாகவும், தனியாகவும் காணலாம். அடிவாரத்தில், ஆஞ்சநேயரும், ராமர் பாதமும் அமைந்துள்ளது. கருங்கல்லால், கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில், 1,893 படிகள் அமைத்துள்ளனர். அந்த திருப்படிகள் வழியாக, பக்தர்கள் சென்று, கொப்பு கொண்ட பெருமாளை தரினசம் செய்கின்றனர்.மேலும், அப்பகுதி மக்கள், தங்கள் குடும்பத்தில் திருமணம் நடத்த வேண்டியிருந்தால், கொப்பு கொண்ட பெருமாள் ஸ்வாமியிடம், வாக்கு கேட்டு, அதன்படி நடத்துகின்றனர். இந்த நடைமுறை, காலம் காலமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.