பதிவு செய்த நாள்
10
நவ
2014
12:11
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரத்தில் பழமை வாய்ந்த கொப்பு கொண்ட பெருமாள் கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி, சின்னமசமுத்திரம் கிராமத்தில், கல்வராயன்மலை தொடர் உள்ளது. கடந்த, 1905ம் ஆண்டுக்கு முன், விவசாய நிலத்துக்கு, இலை, தழைகள் அறுப்பதற்கு ஏராளமான பெண்கள் சென்றனர். அதில், ஒரு பெண் காதில் அணிந்திருந்த, "கொப்பு (தோடு) கழன்று, மண் புற்றுக்குள் விழுந்துள்ளது.அந்த புற்று இடத்தை வெட்டியபோது, ரத்தம் வழிந்தோடியதும், பெருமாள் காட்சியளித்துள்ளார். அதன்பின், "கொப்பு கொண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்டு, ஆண்டு தோறும், புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பச்சை பந்தல் அமைத்து, கொப்பு கொண்ட பெருமாளுக்கு, திருவிழா எடுத்து, பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன்படி, பழமை வாய்ந்தும், மலை உச்சியில் உள்ள கொப்பு கொண்ட பெருமாள் கோவில், மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரம் கட்டிடமும் மற்றும், 11 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலையும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.கோவிலுக்கு செல்வதற்காக, 1,893 கருங்கல்லில் திருப்படிகளும், அடிவாரத்தில் பெருமாள் பாதமும் அமைத்துள்ளனர். இக்கோவிலில் வழிபாடு செய்தால், திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டிய பக்தர்கள், நேர்த்தி கடனுக்காக, "காளை கன்றுகளை, கோவிலுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். கோவில், ராஜகோபுரம் மற்றும் ஆஞ்சநேயர், பாலமுருகன் சிலைகளுக்கு, இன்று, அதிகாலை 5.30 மணி முதல், 7 மணிக்குள், புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, பரம்பரை நிர்வாக அறங்காவலர் கண்ணன் பரசுராமன், கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.