பதிவு செய்த நாள்
12
நவ
2014
11:11
சென்னிமலை : சென்னிமலை மலை கோவிலுக்கு வரும் டூவீலர்களை, மயில் கூட்டம் மிரள வைக்கிறது. சென்னிமலை மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டம் மட்டும் அல்லாமல், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு, பக்தர் கூட்டம் அதிகரித்து வருகிறது.மலை கோவிலை சென்றடைய, படி வழியாகவும் செல்லலாம். வாகனங்களில் செல்வோர், தார் ரோடு வசதி உள்ளதால், அவ்வழியாக, ஒன்பது கொண்டை ஊசி வலைவுகளுடன், நான்கு கி.மீ., பயணித்து செல்ல வேண்டும்.முன்பு, மலை கோவிலுக்கு தேங்காய், பழம் கொண்டு வரும் பக்தர்களிடம், வழி மறத்து பறித்து சென்ற குரங்கு கூட்டங்களை, அதிக தொந்தரவு காரணமாக, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். இதனால், பக்தர்கள் பயம் தெளிந்தது.தற்போது, டூவீலர்களில் செல்வோரை, கூட்டம், கூட்டமாக வந்து மிரள வைக்கிறது மயில்கள் கூட்டம்.தார் சாலையில், மயில் கூட்டம் நடந்து செல்வதாக நினைத்து, டூவீலர் ஓட்டிகள், சாதாரண வேகத்தில் சென்றால்கூட, திடீரென மயில்கள் கூட்டம் பறந்து மிரள வைக்கிறது. இதில் பயந்து, கீழே விழும் நிலை, பக்தர்களுக்கு ஏற்படுகிறது. சில பக்தர்கள் கீழே விழுந்தும், காயமடைந்துள்ளனர்.குரங்குகளை பிடித்தது போல், மயில் கூட்டங்களையும் பிடித்து, வேறு இடத்துக்கு அப்புறப்படுத்துமா வனத்துறை என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.