பதிவு செய்த நாள்
12
நவ
2014
12:11
துறையூர்: துறையூரில், 55 அடி உயர மலேசியா பத்து மலை முருகன் மாதிரி சிலை மற்றும் கோவில் ஸ்வாமிகளுக்கு, இன்று கும்போபிஷேகம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் கரட்டு மலை பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு, அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று, மலேசியா நாட்டிலுள்ள பத்து மலை முருகன் சிலை மாதிரியில் அமைந்த, 55 அடி உயர முருகன் சிலை அமைத்துள்ளனர். மலேசிய முருகன் சிலையுடன் கோவிலில் உள்ள மகாகணபதி, ஐயப்பன், பாலதண்டாயுதபாணி, நவகிரகங்கள், நாகதேவதை கோவில்களை, துறையூர் தனபால் ஸ்தபதி சுதைவர்ண வேலைகளை செய்துள்ளார்.
கோவிலில் இன்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. கோவில் தக்கார் ரத்தினவேல் பாண்டியன், செயல்அலுவலர் மகேந்திர பூபதி, சிலை அமைப்பு குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழாவிற்காக நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. மூங்கில் தெப்பகுளத்திலிருந்து பால், தீர்த்தக்குடம், காவடிகள் எடுத்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோவிலில் அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. கண்ணனூர் சிவசண்முகம் சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்து, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கிறார் பக்தர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.