பதிவு செய்த நாள்
21
நவ
2014
12:11
ஈரோடு : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகாரில் விற்பனை நிலையத்தில், விளக்குகள் கண்காட்சி நேற்று துவங்கியது. நேற்று மாலை விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. வரும், 6ம் தேதி வரை, தினமும், காலை, 10 முதல் இரவு, 8 மணி வரை விற்பனை நடக்கும். ஞாயிறு கிழமைகளிலும் கடை செயல்படும். கிரெடிட், டெபிட் கார்டுகள் பெற்று கொள்ளப்படும். 10 முதல், 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து, பூம்புகார் மேலாளர் மனோகரன் கூறியதாவது:நாச்சியார் கோவில், மதுரை, வாகைகுளம் ஆகிய ஊர்களில் உள்ள, பூம்புகார் விளக்கு உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட, அன்ன குத்துவிளக்குகள், பிரபை குத்து விளக்குகள், மலபார் விளக்குகள், நகாஸ் வேலை செய்யப்பட்ட அன்ன மற்றும் பிரபை குத்து விளக்குகள், பஞ்சலிங்க தீபம், அகல் விளக்கு, விநாயகர், லட்சுமி, பாலாஜி விளக்கு, தொங்கு விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், வாசமாலை விளக்குகள், பித்தனை அகல் விளக்குகள் கண்காட்சியில் விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.
குபேர விளக்குகள், நந்தா தீபம், வித்யா தீபம், பிரதோஷ விளக்குகள், காமாட்சி அம்மன் விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள், 108 அஷ்டோத்ரா தீபம், அன்னம் கிளை விளக்குகள், உடுப்பி விளக்குகள், விநாயகர் அகல் விளக்குகள், கிளி விளக்குகள், அன்னம் டேபிள் விளக்குகள், ஐந்து மற்றும் ஏழு அடுக்கு ஆரத்திகள், ஒன்று முதல், ஐந்து வரை ஆர்த்தி விளக்குகள், கும்ப தீபம் முதலியனவும், விநாயகர், அம்மன் மற்றும் சங்கு சக்கர தொங்கு விளக்குகள் முதலியனவும் விற்பனைக்கு உள்ளன.விற்பனை இலக்காக, இரண்டு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு, 120 முதல், 90 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில், விளக்குகள் உள்ளன. ஐந்தரை அடி உயரம் கொண்ட கிளை விளக்குகள் கண்காட்சியில் சிறப்பு வாய்ந்ததாகும், என்றார்.