பதிவு செய்த நாள்
26
நவ
2014
11:11
பொன்னேரி: தொடர் மழையால், அகத்தீஸ்வரர் கோவில் குளம் நிரம்பி வழிவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னேரி, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் முன்புறம், ஆனந்தபுஷ்கரணி பெயர் கொண்ட குளம் உள்ளது. சில தினங்களாக பெய்த தொடர் மழையால், இந்த குளம் நிரம்பி உள்ளது. சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால், குப்பை கூளங்கள் குளத்தில் விழுந்து, குளம் பாழாகி வருகிறது. அருகில் வசிக்கும் குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால், கழிவுநீர், குளத்தில் விடப்பட்டு, குளம், அதன் புனித தன்மையை இழந்து வருகிறது. தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கோவில் குளத்தினை சுற்றிலும், மூன்று அடிக்கு சுவரும், அதற்கு மேல், வலையும் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அது தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பகுதிவாசிகளே ஒன்றிணைந்து, மேற்கண்ட கோவில் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.