பதிவு செய்த நாள்
26
நவ
2014
11:11
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று இரவு விநாயகர் உற்வசம் நடைபெற்றது. இதில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநயாகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஷ்வரர் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாக வாகனம் வெள்ளோட்டம்: தீப திருவிழாவை முன்னிட்டு தங்க மூலம் பூசப்பட்ட நாக வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தினமும் காலை, மாலை என, இரு வேளைகளிலும், தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கும். இதனால், பழுதடைந்த வாகனங்கள் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. இதில், நான்காம் நாள் விழாவில் சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் நின்ற கோலத்தில் நாக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இந்த வாகனம், 12 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டது.
இந்த வாகனம் பழுதடைந்ததால், ரூ. 5.50 லட்சம் மதிப்பில், சீரமைக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. மேலும் ஸ்வாமி வீதி உலாவின்போது பயன்படுத்தப்படும், 15 லட்ச ரூபாய் மதிப்பிலான, 11 குடைகள் சென்னையை சேர்ந்த ஸ்ரீ அருணாசலா ஆன்மீக சேவா சங்கம் சார்பில், தயாரிக்கப்பட்டு அதை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். நேற்று, விநாயகர் உற்சவத்தில், அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீப திருவிழாவில் இன்று, கொடியேற்றம் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., தமிழ்சந்திரன், அண்ணாமலையார் கோவில், நகரில் அமைக்கப்பட உள்ள தற்காலிக பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில், பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.