பதிவு செய்த நாள்
06
டிச
2014
12:12
மேட்டுப்பாளையம்: குட்டையூர் மாதேஸ்வரன் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காரமடையை அடுத்த குட்டையூரில், மாதேஸ்வரன் மலை மீது மிகவும், பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு மாதேஸ்வரன் சுவாமி லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
நேற்று மாலை 5.30 மணிக்கு கோவில் வளாகம் முன்புறம் பரணி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலை உச்சியில் வைத்துள்ள, பெரிய கொப்பரையில் பசு நெய் ஊற்றி, 6.00 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. சுடர் விட்டு எரியும் தீபத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது எரியும் தீபத்தை வணங்கிய பின்பு, மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், ஆறுமுக வேலவர் சுவாமி கோவிலிலும் கார்த்திகை தீப விழா நடந்தது. கோவில் முன்பு பரணி தீபமும், உள்வளாகத்தில் கார்த்திகை தீபமும் ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி, உமையவள் லோகநாயகி அம்பாளுடனும், ஆறுமுக வேலவர் வள்ளி, தெய்வானையுடனும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.