யயாதியின் வம்சத்தில் வந்தவன் ஜ்யாமகன். சயிப்யா என்ற பேரழகியை அவனுக்குப் பெற்றோர் மணமுடித்திருந்தனர். சயிப்யா கணவனிடம் அபார அன்பு கொண்டிருந்தாள். ஆனால், கணவரை நம்பாமல் ஆண் மகன்களையே அவனுக்குப் பணிபுரிய நியமித்திருந்தாள். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளாகியும் சயிப்யைக்குக் குழந்தையே பிறக்கவில்லை. ஒரு சமயம் நீண்ட காலம் யுத்தம் நடந்தது. போரில் ஜ்யாமகனே வெற்றி பெற்றான். எதிரிப்படைகள் புறமுதுக்கிட்டு ஓட, ஒரு மாளிகையிலிருந்து, பெண்ணின் அழுகைக்குரல் கேட்டு மாளிகைக்குள் சென்றான். உள்ளே கண்ணீர் விடும் கோலத்திலும் அந்தப் பருவ மங்கையின் சுந்தர வடிவம் ஜ்யாமகனைகிறங்க வைத்தது.
ரூபவதி! உன் பெயரென்ன? என்று கேட்டான். ஸ்நுஷா என்றாள் குயில் குரலில். என்னோடு வா. நான் உனக்கு வாழ்க்கை அமைத்துத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. என் மனைவி ஒரு சந்தேகப் பிராணி. அவளை அனுசரித்துப் போக வேண்டும் என்றான் ஜ்யாமகன். ஸ்நுஷாவை தேரிலேற்றிக்கொண்டு நாடு திரும்பிய ஜ்யாமகன், எப்படிச் சொன்னால் சயிப்யா சம்மதிப்பாள்? என்று யோசித்தபடி நகரத்துள் வந்தான் ஜ்யாமகன். தேவி! அரசரின் தேரில் அவரது இடப்புறம் ஒரு செ*ளபாக்கியவதி வீற்றிருக்கிறார் என்று தகவல் தெரிவித்தான் ஒரு காவலன். கையில் பூமாலையுடன் பணிப்பெண்டிர் ஆரத்தி, சந்தனம், பன்னீர் செம்பு, பழ வகைகளுடன் பின் நிற்க. அரண்மனை வாயிலில் நின்ற சயிப்யையின் விழிகள் சிவந்தன; உதடுகள் துடிக்க. சபல சித்தமுடைய அரசே! இவள் யார்? என நெருப்பென சொற்களை உமிழ்ந்தாள். ஏவலர், மந்திரிகள், குலகுரு, சேனாதிபதி, மக்கள் முன் தலைகுனியும்படி ஆகிவிடுமோ என அஞ்சிய ஜ்யாமகன், இவள் என் மருமகள் என்றான் சட்டென்று.
சயிப்யை வியப்போடு, எனக்கோ குழந்தையே பிறக்கவில்லை. அப்படியிருக்க இவள் எந்தவிதத்தில் மருமகளாவாள்? எனக்குத் தெரியாமல் பிள்ளை பெற்று வைத்திருக்கிறாயா? என்று கேட்டாள். அன்பே! இதுவரை நமக்குப் புத்திரனில்லை என்பது நிஜம்தான்! ஆனால், இனி பிறக்கலாமல்லவா? அப்படிப் பிறந்து அழகிய கன்னிகை கிடைக்காமல் அவதிப்படக் கூடாதென்றே இவளை அழைத்து வந்தேன். சுந்தரமான பொருளை அலட்சியம் செய்யலாகாதென எண்ணியது குற்றமா? என ஜ்யாமகன் கூற, வேறுவழியின்றி ஸ்நுஷாவுக்கும் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றாள் சயிப்யா.
எனது மூதாதயர்களே, நீங்கள் செய்த நூறு அஸ்வமேத யாக பலனால் எனக்கொரு மைந்தனை அருள வேண்டும். என்று தினமும் பிரார்த்தித்தான் ஜ்யாமகன். சிறிது காலத்தில் சயிப்யை கருவுற்று விதர்ப்பன் என்ற புதல்வனை ஈன்றாள். விதர்ப்பன் வாலிபனானதும் ஸ்நுஷாவை அவனுக்கு விவாகம் செய்து வைத்தனர். கிருதன், கைசிகன், ரோமபாதன் என்று மூன்று பிள்ளைகள் அவர்களுக்குப் பிறந்தனர். ரோமபாதன் நாரத முனிவரிடம் உபதேசம் பெற்றவன். ஜ்யாமகனுடைய சரித்திரத்தைக் கேட்டாலே பாபம் அழியும். என்கிறது. விஷ்ணு புராணம். ஜ்யாமகனின் வம்சத்தில் உதித்தவளே சத்தியபாமா.