பதிவு செய்த நாள்
01
ஜன
2015
11:01
திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, திருப்பூரில், நேற்று மோகினி அலங்கா ரத்தில், எம்பெருமாள் எழுந்தருளினார். வைகுண்ட ஏகாதசி விழா, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்து வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு, எம்பெருமாள் மோகினி அலங்காரம், ஸ்ரீநாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். இன்று அதிகாலை 3:00 மணிக்கு, வேதங்கள் முழங்க, ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. பால், தயிர், தேன் என பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், எம்பெரு மாள் கருட சேவை, வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 11:00 மணி வரை சொர்க்க வாசலில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
இரவு 8:00 மணிக்கு, ராப்பத்து உற்சவம், திருவாய்மொழி திருநாள் துவங்குகிறது. வரும் 10ல், ஆழ்வார் மோட்சம் உற்சவம், 11ல் கூடாரை வெல்லும் சீர் உற்சவம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, எம்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ராஜகோபுரம் வழியாக பொது தரிசனமும், தெற்குவாசல் வழியாக சிறப்பு தரிசனத்துக்கு வரிசை தடுப்பும் அமைக் கப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் வழியாக அனைத்து பக்தர்களும் வெளியே வர வேண்டும். ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் லட்டு பிரசாதம், பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் அவல் மற்றும் கேசரி பிரசாதம் வழங்கப்படுகிறது. கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில்,சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
திருப்பூர் திருப்பதி கோவிலில் விழா: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை 2:30 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. நெய், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் வேங்கடேச பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் எம்பெருமான், அதிகாலை 5.00 மணிக்கு, சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.