பதிவு செய்த நாள்
02
ஜன
2015
02:01
கோவை : ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாவிஷ்ணுவின் திருவருளை பெற எளிமையான வழி, ஏகாதசி விரதம் இருந்து வணங்குவது. ஏகாதசி என்றால் வடமொழியில், 11 என்று பொருள். மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமியை அடுத்து 11வது நாள் ஏகாதசி. ஓராண்டில் 24 ஏகாதசி நாட்கள். இந்நாளில் நாம் விரதமிருந்து, இரவு கண்விழித்து, திருமாலை வணங்கினால் இப்பிறவியை நிறைவு செய்து, இறைவனை எளிதாக அடையலாம்.அப்படி செய்ய முடியாதவர்கள், மார்கழி மாதம் வரும் சுக்லபட்ச ஏகாதசி (வைகுண்டஏகாதசி) நாளில் விரதமிருந்தால், ஓராண்டு முழுக்க அனைத்து ஏகாதாசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசியன்று, வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுவதாக ஐதீகம். அதைக்குறிக்கும் வகையில், பெருமாள் கோவில்களில் கர்பகிரஹத்தை சுற்றியிருக்கும் பகுதியில், வைகுண்டவாசல் அமைத்து, பக்தர்கள் அதை, கடந்து செல்ல வசதி செய்யப்படுகிறது.ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் வைகுண்டஏகாதசி விழா நேற்று நடந்தது. காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசலை, பெருமாள், சேஷ வாகனத்தில் கடந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுவாமி தரிசனத்துக்காக, நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
பாப்பாநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பிரம்மாண்ட விழாவாக கொண்டாடப்பட்டது. சொர்க்கவாசலை கடந்து, சுவாமி கண்ணாடி மாளிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பெரிய கடைவீதியிலுள்ள லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் உற்சவர் கஸ்துாரிரங்கர், தேவியரோடு, சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
சலிவன்வீதியிலுள்ள வேணுகோபாலசுவாமி கோவில், பேட்டை கல்யாணவெங்கட்ரமணசுவாமி கோவில், உக்கடத்திலுள்ள லட்சுமிநரசிம்மர்கோவில், மருதமலை ரோடு, பி.என்.புதுாரிலுள்ள கோதண்டராமர் கோவில், பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள்கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வைகுண்ட ஏகாதசிவிழா பிரம்மாண்ட விழாவாக கொண்டாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சொர்க்கவாசலை கடந்து, சுவாமியை தரிசித்தனர்.