பதிவு செய்த நாள்
02
ஜன
2015
02:01
மேட்டுப்பாளையம்: புத்தாண்டு அன்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள, வைஷ்ணவ திருத்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சன பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 5:00 மணிக்கு உச்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து, ஆஞ்சநேயர் சன்னதி முன்பு வீற்றிருந்தார்.அங்கு கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் பெருமாள் திருவடியின் கீழ் இருந்த, பரமபத வாசல் கதவு சாவியை, அர்ச்சகர் எடுத்து, ஊர்கவுடர் முத்துசாமியிடம் கொடுத்தார். சரியாக காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது.
அப்போது திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், சொர்க்க வாசல் முன் நின்று, அரங்கநாத பெருமாளை எதிர் கொண்டு வணங்கினர். முதலில் பெருமாள், மூன்று ஆழ்வார்களுக்கும் காட்சி கொடுத்தார். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள், சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அப்போது நுாற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தும் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். சொர்க்க வாசல் முன், அலங்கார பந்தலில் சுவாமி எழுந்தருளினார்; அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, சுவாமியின் திருவீதி உலா புறப்பாடு துவங்கியது. சொர்க்கவாசல் மற்றும் நான்கு ரத வீதிகளில், 25க்கும் மேற்பட்ட சமூகத்தினரால் அமைத்திருந்த பந்தல்களில் சுவாமி எழுந்தருளினார்.
வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டு, சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தனர்.நான்கு ரத வீதிகள் வழியாக, சுவாமி வலம் வந்து வசந்த மண்டபத்தில் இரவு எழுந்தருளியதும், ராப்பத்து உற்சவம் துவங்கியது.