விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதி வழியாக ஊர்வலம் வந்தார்.பெருமாள் கோவில் எதிரில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை , சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. மாலையில் நாதஸ்வர மேளக்கச்சேரி மற்றும் கடலூர் துறைமுகம் ராஜமாதங்கி நாட்டிய பயிற்சி பள்ளி மாணவியின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. விக்கிரவாண்டி மற்றும் சுற்றியுள்ள மக்கள் தரிசனம் செய்தனர் . பூஜைகளை கோகுல ராமானுஜ தேசிக தாசன் தலைமையில் மதன் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் செல்வராசு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.