பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
10:06
தூத்துக்குடி: பழநி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் நேற்று வைகாசி விசாகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. ஏழாம் நாளான நேற்று, மலைகோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டனர். முன் தேரின் மீது பழங்களையும், நவதானியங்களையும் பக்தர்கள் வீசினர். விடலை தேங்காய்களை உடைத்தனர். மாலை 5.05 மணிக்கு தேரடி தேர் நிலையில் இருந்து துவங்கி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. மாலை 5.55 க்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் பழநி கோயில் இணை கமிஷனர் ராஜா, துணை கமிஷனர் மங்கையற்கரசி, உதவி கமிஷனர் நடராஜன், நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* திருச்செந்தூரில் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்றகால பூஜைகள் தொடர்ந்தன. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் மற்றும் அடிப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். கால்நடைகள், நவதானியங்களை கோயிலுக்கு தானமாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக நெல்லையிலிருந்து சிறப்பு ரயில்கள், முக்கிய ஊர்களில் இருந்து 100 அரசு சிறப்பு பஸ்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டன.