பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
10:06
குருவாயூர்: பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்க, மாநில கூட்டுறவுத் துறை சார்பில், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், "கேன்டீன் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் சி.என்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தேவஸ்வம் போர்டு சார்பில், பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கேரள மாநிலத்தில், கூட்டுறவுத் துறை புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள சி.என்.பாலகிருஷ்ணன், குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்தார். துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: குருவாயூரில் விரைவில், "திரிவேணி என்ற பெயரில், நடமாடும் சூப்பர் மார்க்கெட் திறக்கப்படும். கிருஷ்ணனை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, குறைந்த விலையில் உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக, "கேன்டீன் திறக்கப்படும். நடமாடும் சூப்பர் மார்க்கெட் மற்றும் கேன்டீன் ஆகியவை, ஓணம் பண்டிகைக்கு முன்பாக செயல்படும். மாநிலத்தில் கூட்டுறவு துறை சார்பில் வரும் ஆண்டுகளில் மதுபான கடைகளோ, பார்களோ திறக்க அனுமதி வழங்க மாட்டோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.