திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து நடராஜர், சிவகாமி சுந்தரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் சமேத சிவகாமசுந்தரி அம்மன் எழுந்தருளினார். கார்த்திகை தீப திருவிழாவில் மஹா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையிலிருந்து எடுக்கப்பட்ட தீப மை பிரசாதம் முதலில் நடராஜருக்கும், சிவகாமி சுந்தரி அம்னுக்கு சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து திருமஞ்சன கோபுர வாயில் வழியாக ஸ்வாமியும், அம்மனும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.