பதிவு செய்த நாள்
22
ஜன
2015
11:01
உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரியில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், விட்டில் ராஜ பெருமாள் கோவில், இப்பவோ... அப்பவோ... என. இடியும் அபாயத்தில் உள்ளது. இதை சீரமைத்திட, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தணஞ்சேரி கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த விட்டில் ராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 500 ஆண்டுகளுக்கு முந்தைய, இக்கோவிலில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று, புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக இருந்து வந்தது. காலப்போக்கில், இப்பகுதியைச் சேர்ந்தோர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததைத் தொடர்ந்து, கோவில் பராமரிப்பின்றி போனது. கோவிலில் இருந்த உற்சவர் மற்றும் ஐம்பொன் சிலைகள், பாதுகாப்பு கருதி, சீட்டஞ்சேரியில் உள்ள காளீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இக்கோவில் கட்டட பகுதியில் ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், ஒரு சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும் சிதிலமடைந்து வருகிறது. கோவிலின் கோபுர பகுதி மற்றும் கோவில் மேற்பகுதிகள் முழுவதும் மரக்கன்றுகள் வளர்ந்து, புதர் போல காட்சியளிக்கிறது. எனவே, பராமரிப்பின்றி சீரழிந்து வரும் பழமையான இக்கோவிலை சீரமைத்து பாதுகாத்திட, இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்து சமய அறநிலைய துறை அதிகாரி கூறுகையில், கோவில் பராமரிப்புக்காக 18 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரித்து, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.