பதிவு செய்த நாள்
18
பிப்
2015
02:02
சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மற்றும் பொது தீட்சிதர்களின் தில்லை
நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், நாட்டியாஞ்சலி விழா இரண்டு இடங்களில் நேற்று துவங்கியது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் தெற்கு வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில், நேற்று மாலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கி, முதல் நிகழ்ச்சியாக பெங்களூரு நடராஜா ஆர்ட்ஸ் அகாடமி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. துவக்க விழாவிற்கு, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலர் சம்பந்தம் வரவேற்றார். முக்கிய பிரமுகர்கள், முன்னணி நடன கலைஞர்கள் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, நாட்டியக் கலைஞர்களின் பரதம், குச்சுப்புடி, நாட்டிய நாடகம் நடந்தது.
ஏற்பாடுகளை, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் சென்னை டாக்டர்
நாகசுவாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மற்றொரு நாட்டியாஞ்சலி:பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், முதல் நாட்டியாஞ்சலி விழா கிழக்கு கோபுரம் அருகில், நேற்று மாலை 4:00 மணிக்கு நாதஸ்வர இசையுடன் துவங்கியது. துவக்க விழாவிற்கு, நடராஜர் கோவில் பொது தீட்சிதர் செயலர் பாஸ்கர தீட்சிதர் தலைமை தாங்கினார். நிர்வாகி குப்புசாமி தீட்சிதர் வரவேற்றார். முன்னணி நடன கலைஞர் பத்மா சுப்ரமணியன், நந்தினி ரமணி, திருவாரூர் பக்தவச்சலம், ஜெயப்ரியா விக்கிரமன் உள்ளிட்ட நடன கலைஞர்கள் வாழ்த்திப் பேசினர். பொது தீட்சிதர்கள் சார்பில் நாட்டிய கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் செயலர் அய்யப்ப தீட்சிதர் நன்றி கூறினார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலியில் நேற்று அதிகாலை, 5:00 மணி வரை பரத
நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரண்டு இடங்களிலும் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில், வெளிநாட்டினர் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை ரசித்தனர். இரண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும், வரும் 21ம் வரை நடைபெறுகிறது.