பதிவு செய்த நாள்
18
பிப்
2015
03:02
சேலம்:மஹாசிவராத்திரியை ஒட்டி நேற்று, சேலம், சிவன்கோவில்களில் நடந்த, எட்டு ஜாம
பூஜைகளில் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.மஹாசிவராத்திரியை ஒட்டி, சேலம் மாநகர், புறநகரில் உள்ள சிவன்கோவில்களில் பக்தர்கள் தரிசனம் மேற் கொள்ள வசதியாக நேற்று அதிகாலை, 5 மணிக்கு கோவில்களின் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், மஹாசிவராத்திரியை ஒட்டி, நேற்று காலை முதல், மாலை வரை, நான்கு பகல் கால பூஜைகளிலும், இரவு துவங்கி அதிகாலை வரை, நான்கு விசேஷ ஸ்னபனம் உட்பட நான்கு கால ஜாம பூஜை நடந்தது. இதில், மூலவர் சுகவேனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன், பரிகார தெய்வங்களுக்கு தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
சேலம், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவிலில், மஹா சிவராத்திரியை ஒட்டி, பிப்.,15ல், 1,008 சங்காபிஷேக கலச பூஜை துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் மஹாருத்ரஜபம் துவங்கி நடந்தது.
நேற்று அதிகாலையில், காசி விஸ்வநாதருக்கு மஹா அபிஷேகம், 11 கலஸாபிஷேகம் ஆகியன நடந்தது. காலை, 7.30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையில், மஹா அபிஷேகம், 11 கலஸாபிஷேகம், மஹா முகவாசம் ஆகியன நடந்தது. காலை, 10 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, 1,008 சங்காபிஷேகம், பஞ்சமுக கவச அலங்காரம், மஹா ருத்ர ஹோமம், வஸோத்தாரா ஹோமம் ஆகியன நடந்தது.மாலை, 3 மணிக்கு நான்காம் கால பூஜையில், நந்திகேசுவரர், மூலவர் காசி விஸ்வநாதர், பிரோதஷ மூர்த்திகளுக்கு, 11 கலஸாபிஷேகம், பஞ்சலிங்கத்துக்கு, ஐந்து கலஸாபிஷேகம், அண்ணாமலையாருக்கு ஒரு கலஸாபிஷேகம் நடந்தது.மாலை, 6 மணிக்கு நடந்த ஐந்தாம் கால பூஜையில், மஹா அபிஷேகம், 108 கலஸாபிஷேகம், மஹா ருத்ர கலஸாபிஷேகம், பஞ்சமுக ருத்ராட் கலச அலங்காரம், 13,331 ருத்ராட்சங்கள் கொண்ட அலங்கார சேவை நடந்தது.
இரவு, 10.30 மணிக்கு நடந்த ஆறாம் கால பூஜையில், மஹா அபிஷேகம், 51 கலஸாபிஷேகம், வெள்ளி நாகாபரண சேவை, தீபாரானையும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த ஏழாம் கால பூஜையில், 25 கலஸாபிஷேகம், முத்தங்கி கவசம், தீபாராதனையும், அதிகாலை, 3.30 மணிக்கு நடந்த எட்டாம் கால பூஜையில், 16 கலஸாபிஷேகம், தாமிர நாகாபரண சேவை, சோமாஸ்கந்த பரமேஸ்வரர், ஆஸ்தான சேவை ஆகியன நடந்தது.இந்த பூஜைகளில் திரளாக பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில்,
செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், குகை அம்பலவாண ஸ்வாமி கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் கட்டளை தாரர்கள், கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.சேலம், சீரகாபாடி, 1,008 சிவாலயம், தாரமங்கலம் கைலாசநாத ஸ்வாமி கோவில், இடைப்பாடி பிரசன்னநஞ்சுண்டேஸ்வரர் கோவில், வாழப்பாடி காசி விஸ்வநாதர் கோவில், பேளூர் தான்தோன்றிஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வர ஸ்வாமி கோவில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர் கோவில், ஆறகளூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் கோவில், தெடாவூர் ஏகாம்பரநாதர் கோவில், வீரகனூர் கங்கா சௌந்தரேஸ்வரர்கோவில் ஆகிய கோவில்களில், சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், எட்டு கால பூஜை நடந்தது.நேற்று அதிகாலை துவங்கி, இன்று அதிகாலை வரையில், இரவு முழுவதும் நடந்த எட்டு கால பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர். இரவு முழுவதும் பூஜை நடந்ததால், சேலம் மாநகர், புறநகர் பகுதிகளிலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.