விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் விருத்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விநாயகர், முருகர், சுவாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வன்னியடி பிரகாரத்திலுள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிரதோஷ நந்தி கொடிமரம் மற்றும் வன்னியடி பிரகாரத்திலுள்ள மற்ற மூன்று கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. பின்னர், பஞ்சமூர்த்திகளும் அய்யனார் கோவில் வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் அருளழகன், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு ஏகசான மஞ்சத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.