பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
கோவை : கோனியம்மன் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிக்கை: கோவை மாநகரில் உள்ள கோனியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் ஊர்வலம் மார்ச் 4ம் தேதி மதியம் நடப்பதை முன்னிட்டு, மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.இதன் படி, பாலக்காடு ரோட்டிலிருந்து, உக்கடம் ஒப்பணக்கார வீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வாலாங்குளம் பைபாஸ் ரோடு, பேரூர் பைபாஸ் ரோடு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், லங்கா கார்னரிலிருந்து பாலக்காடு ரோடு செல்லும் இருசக்கர, இலகுரக வாகனங்கள், கூட்ஸ்ஷெட் ரோடு, பெரியகடை வீதி, வின்சென்ட் ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.கனரக வாகனங்கள், லங்கா கார்னர் அரசு மருத்துவமனை வழியாக, வாலாங்குளம் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம். பஸ்கள் வழக்கம் போல் டவுன்ஹால் வழியாக உக்கடம் அடையலாம். டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, ஒப்பணக்கார வீதிக்கு செல்ல அனுமதியில்லை.அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் புரூக்பாண்ட் ரோடு வழியாக செல்ல வேண்டும். மேட்டுபாளையம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் புரூக்பாண்ட் ரோடு, அவினாசி மேம்பாலம் வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம்.
தடாகம் ரோடு, பேரூர் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதுார், ராமமூர்த்தி பாதை வழியாக பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்ல வேண்டும்.லாரிகளுக்கு காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, பெரியகடை வீதி, கருப்புக்கவுண்டர் வீதி ஆகிய வீதிகளுக்குள் செல்ல அனுமதியில்லை. கோவை ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பணக்கவுண்டர் வீதி ஆகிய ரோடுகளில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுஇவ்வாறு, அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.