பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவில், எட்டாம் ஆண்டு மாசி மக மண்டகப்படி உற்சவம் நாளை நடக்கிறது. அப்போது, ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருவார். காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில், மண்டகப்படி உற்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உற்சவத்திற்காக, நாளை காலை 9:00 மணியளவில், ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர், கோவிலில் இருந்து புறப்படுவார். வழியெங்கும் வேதபாராயணம், ஓதுவார்களின் திருமுறை விண்ணப்பம், மங்கள இசை, சிவபூத கணத்தினரின் பம்பை உடுக்கை இசை, பேண்டு வாத்தியங்கள், சிலம்பாட்டம், சிவ பூதகண வாத்தியங்களுடன் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்படும். நான்கு ராஜ வீதி, கனகசுப்புராயர் தெரு, நிமந்தகாரத் தெரு, நிமந்தகார ஒத்தவாடை தெரு வழியாக, பிற்பகல் 1:00 மணியளவில் அமரேஸ்வரர் கோவிலை வந்தடைவார். அங்கு, ஏகாம்பரநாதருக்கு மண்டகப்படி உற்சவம் நடைபெறும். மாலை 5:00 மணியளவில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மைக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 9:00 மணியளவில், அமரேஸ்வரர் கோவிலில் இருந்து ஏலவார்குழலியுடன், ஏகாம்பரநாதர் தங்கள் திருக்கோவிலுக்கு புறப்பட்டு செல்வார். விழாவிற்கான ஏற்பாட்டை சுந்தரேசன், அன்பழகன், ரகு என்ற வெங்கடேசன் செய்துள்ளனர்.