பதிவு செய்த நாள்
05
மார்
2015
12:03
திருச்செங்கோடு: திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் கோவிலில்களில், மாசிமக தேர்திருவிழா, அக்னி குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது.திருச்செங்கோடு, அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில், மாசிமக விழா நடந்தது. அதில், 37வது ஆண்டாக, அர்த்தனாரீஸ்வரர் ஸ்வாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், நேற்று காலை, திருச்செங்கோடு அழகுநாச்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, பால்அபிஷேக குடம், பூஜைபொருட்கள் என, மேளதாளம் முழங்க நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.பின், மலைக்கோவில் படிகள் வழியாக சென்று, அர்த்தனாரீஸ்வரர் கோவிலை பக்தர்கள் அடைந்தனர்.
மலைக்கோவிலில், சித்திவிநாயகர், செங்கோட்டு வேலர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள், நாகேஸ்வரர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்கள், சிவன் மற்றும் பார்வதி வேடமணிந்து, பக்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* திருச்செங்கோடு சின்ன ஓம்காளி அம்மன் கோவிலில், மாசிக் குண்டம் திருவிழா, நேற்று நடந்தது. குண்டம் இறங்குவதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று முன்தினம் காலை முதல், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கையில் காப்பு கட்டிய பக்தர்கள், நேற்று அதிகாலை, 4 மணிக்கு, 60 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கினர். முதலில் கோவில் பூசாரி குடும்பத்துடன் குண்டத்தில் இறங்க, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். வரும், 7ம் தேதி அம்மன் திருவீதி உலாவுடன், மாசிக்குண்டம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
* ராசிபுரம் அடுத்த பட்டணத்தில், தண்டு மாரியம்மன் கோவிலில், நேற்று, தேர்த் திருவிழா நடந்தது. பட்டணம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். நேற்றிரவு அம்மன் திருவீதி உலாவும், வாளைக்கட்டை கரகம் அழைத்தலும் நடந்தது. இன்று (மார்ச், 5) பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, பெண்கள் அலகு குத்துதல், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை, 6 மணிக்கு கம்பம் பிடுங்குதலும் நடக்கிறது.