பதிவு செய்த நாள்
09
மார்
2015
05:03
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வர் சுவாமி கோயில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோயிலில் முறையே 60,70, 80 வயது பூர்த்தியடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என் பது ஐதீகம்.
இதனை முன்னிட்டு தினந்தோறும் தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கோ பூஜை, கஜ பூஜை, ஹோமங்கள் செய்வது வழக்கம். கோயிலில் இருந்த யானை அபிராமி உடல் நலக்குறைவால் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மா தம் 25 ம் தேதி உயிரிழந்தது. தொடர்ந்து கோயிலில் ஹோமல் செய்ய வரும் பக்தர்கள் யானை இல்லாததால் கஜ பூஜை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 11 வயதுடைய பத்மாவதி என்ற புதிய யானை அஸ்சாம் மாநிலத்தில் இருந்து திருக்கடையூர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம், அஷ்ட கஜ பூஜைகள் செய்தனர். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற, யானைக்கு அபிராமி என புதியபெயர் சூட்டப்பட்டது. இதனையடுத்து யானை அபிராமி கோயிலை வலம் வந்து சுவாமி, அம்பாளை நமஸ்காரம் செய்தது. இதில் கோயில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.