திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே, பொதக்குடி நுார் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில் நடந்த சந்தனக் கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி நுார் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில், கந்துாரி விழா கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினசரி சிறப்பு வழிபாடு, துஆ ஓதுதல் நடந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு 10.00 மணிக்கு, மின் அலங்காரத்தில் சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது.தர்காவில் இருந்து துவங்கிய ஊர்வலம், பொதக்குடியில் முக்கிய வீதிகள் வழியாக சென்று அதிகாலை 5.30 மணிக்கு தர்காவை வந்தடைந்தது. நேற்று காலை 7.00 மணியில் இருந்து பிற்பகல் 3.00 வரை பகலிலும் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் பங்கேற்று, சந்தனக்கூட்டில் மலர் துாவி காணிக்கை செலுத்தினர்.