பதிவு செய்த நாள்
12
மார்
2015
12:03
நகரி: நகரி கிராம தேவதையான ஓர்குண்டாலம்மன் கோவிலில், இன்று, மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. சித்துார் மாவட்டம், நகரி பகுதியில், ஓர்குண்டாலம்மன் கோவில் உள்ளது. இது, கிராம தேவதை கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம், கடந்த ஜன., 23ம் தேதி நடந்தது. 48 நாட்கள் நிறைவை ஒட்டி, இன்று, மண்டலாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து கணபதி ஹோமத்துடன், இன்று காலை 6:00 மணிக்கு விழா துவங்குகிறது. தொடர்ந்து, காலை 8:00 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை மண்டலாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் அப்பகுதி பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.