பதிவு செய்த நாள்
23
மார்
2015
12:03
திருப்பூர் : கோவில்களில் விழாக்காலம் துவங்க உள்ள நிலையில், சந்தைகளில் கிடாய்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில், திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் விழா, அந்தியூர் போத்தம்பாளையம் ஒண்டி கருப்பராயன் கோவில் விழா, கருவலூர் மாரியம்மன் கோவில் விழா உள்ளிட்ட பல கோவில்களில், திருவிழா காலம் துவங்க உள்ளது. இக்கோவில்களில், பங்குனி இறுதியில் பூச்சாட்டு விழா நடைபெறும்.இதேபோல் செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, பல்லடம், திருப்பூர் புறநகர் பகுதிகளில், அடுத்த வாரம் கம்பம் நட்டு, தீர்த்தக்குடம் எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டு உள்ளிட்ட விழாக்கள் நடத்தப்படும்.கோவில்களில் தொடர்ச்சியாக விசேஷங்கள் வருவதால், கிடாய்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மூலனூர் அடுத்த கன்னிவாடியில் பெரிய ஆட்டுச்சந்தை கூடுகிறது.
8 மாத ஆட்டுக்குட்டி 4,500 முதல் 6,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 1 அல்லது 2 வயதுள்ள குட்டிகள் 7,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகின்றன. சேவூர், புளியம்பட்டி, அந்தியூர், ஊத்துக்குளி, ஆர்.எஸ்., பகுதிகளில் சந்தை கூடினாலும், எதிர்பார்க்கும் ஆடு ரகங்கள் வருவதில்லை.சந்தை ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், "வீடுகளில் ஆடு வளர்த்த காலம் போய்விட்டது. விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் கூட, ஆடு வளர்ப்பதில்லை. கறிக்கடை வியாபாரத்துக்கு தேவையான ஆடுகள் மட்டுமே, சந்தைக்கு வருகின்றன.வியாபாரிகள் மட்டுமின்றி, கோவிலுக்கு வேண்டிக்கொண்டு கிடாய் வெட்ட விரும்புவோர் கூட, சந்தைக்கு வருகின்றனர். இதனால், கிடாய் குட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. விற்பனை நடக்கும் அளவுக்கு, கிடாய் குட்டிகள் வருவதில்லை, என்றனர்.