பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
புதுச்சேரி: இந்து மத மரபுப்படி, ராமநவமியை, பத்து நாட்களுக்கு கொண்டாட வேண்டும் என, சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார். புதுச்சேரி ஆர்ஷ வித்யா பவன் சார்பில், அண்ணா நகர் எட்டாவது குறுக்குத் தெருவில் உள்ள, சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில், மார்ச் 22ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தினமும் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொற்பொழிவு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். விழாவில் ராமச்சந்திரமூர்த்தி என்ற தலைப்பில் சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி பேசியதாவது: வட மாநிலங்களில், இந்து மத மரபுப்படி 10 நாட்கள் ராமநவமி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கு பெரும்பாலும் ஏழு நாட்கள்தான் ராமநவமி விழா கொண்டாடப்படுகிறது. எனவே, வரும் காலங்களில் மரபில் உள்ள படி ராமநவமி விழாவை 10 நாட்கள் கொண்டாட முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில், பல்வேறு பகுதிகளில் ராமாயணம் குறித்த சொற்பொழிவுகள் நடந்து வருகிறது. அந்நாட்டின் விமான சேவை, இந்து தர்மத்தை குறிக்கும் வகையில் கருடா எனவும், வங்கி சேவை குபேர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. தர்மத்தின் மொத்த உருவமானவர் ராமச்சந்திரமூர்த்தி. எந்த விஷயத்தையும் சொல்வது எளிமை, அதனை கடைபிடித்து வாழ்வது கஷ்டம். ராமச்சந்திரமூர்த்தி காட்டிய வழியை, மானுடம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி பேசினார்.
புதுச்சேரி திருக்குறள் மன்ற தலைவர் கலியன் எதிராசன் சிறப்புரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று 23ம் தேதி, ஸ்ரீமதி சீதா மாதா என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை 24ம் தேதி, அகலிகா, தாரா, மண்டோதரி என்ற தலைப்பிலும், 25ம் தேதி, ராவணன் என்ற தலைப்பிலும், 26ம் தேதி, அனுமான் என்ற தலைப்பிலும், 27ம் தேதி, கைகேயி வரம் என்ற தலைப்பிலும், 28ம் தேதி, வாலி வதம் என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவு, தினமும் மாலை 6.40 மணிக்கு துவங்கி, 8.௦௦ மணி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆர்ஷ வித்யா பவன் மற்றும் வரசித்தி வலம்புரி விநாயகர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.