பதிவு செய்த நாள்
25
மார்
2015
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான உற்சவம், நேற்று காலை 6:40 மணியளவில், சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, ஏலவார்குழலி சமேதராக ஏகாம்பரநாதர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை முடிந்த பின், காலை 8:15 மணியளவில், ஏகாம்பரநாதர் பவளக்கால் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை சென்றடைந்தார். இரவில், சிம்ம வாகனத்தில் சுவாமியும்; கிளி வாகனத்தில் அம்பிகையும் எழுந்தருளி, ராஜவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.