ஆந்திராவில் பஞ்ச நரசிம்ம தலங்கள் உள்ளன. அவை மங்களகிரி, வேதாத்ரி, வாடபல்லி, கேதவரம், மட்டபல்லி என்பன. இதில் முதல் தலமாக விளங்கும் மங்களகிரி நரசிம்மர் நைவேத்யமாக படைக்கும் பானகத்தில் பாதியைக் குடித்து விடுவார் என்பது கலியுக அதிசயம். அப்படி ஒரு அற்புதசக்தி படைத்தவர் அவர். பானக பாத்திரத்தை அர்ச்சகர்கள் நரசிம்மரின் திறந்த அகன்ற வாயில் வைப்பர். பானகத்தின் அளவு குறைந்து கொண்டே வரும். பாதியளவு வந்தவுடன் கலகலவென்று ஒரு சப்தம் வரும். அதன் பிறகு பானகம் உள்ளே செல்லாது. பால் குடிக்கும் சிறு குழந்தைகள் தங்களுக்கு அது தேவையில்லை என்றால் கொப்பளிப்பது போல, வாயில் இருந்து வெளியில் வர ஆரம்பித்து விடும். அந்த பாதி பானகத்தை நமக்குப் பிரசாதமாகக் கொடுப்பார்கள். பாத்திரம் சிறிய குடமாக இருந்தாலும் சரி, கங்காளம் எனப்படும் பெரிய அண்டாவாக இருந்தாலும் சரி தான்... இவர் பாதியை மட்டுமே ஏற்பார். பானகத்தை சுவாமிக்குப் படைக்கும் முன்பு பாத்திரத்தின் அருகில் எறும்புகள் வராது. ஆனால், பானகம் பாதி காலியானதும் எங்கிருந்தோ எறும்புகளும் வந்து கீழே சிந்திய பானகத்தை மொய்க்க ஆரம்பித்து விடும்.