தூத்துக்குடி,: தூத்துக்குடியில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும், இயேசுவின் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை சுமந்து வரும் போது அவர் பட்டபாடுகளையும், இறந்ததை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். இந்தாண்டு தவக்காலம் சாம்பல் புதன் தினமான பிப்., 18 ல் துவங்கியது. தவக்காலத்தின் கடைசி நாளில் இயேசு உயிர் நீத்த தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கத்தோலிக்க சர்ச்சுகளிலும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. பிரசித்தி பெற்ற பனிமயமாதா சர்ச்சில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமப்பது போன்ற சொரூபம் சர்ச்சினை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பாதிரியார் லெரின் டீரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திரு இருதய சர்ச்சில் தூத்துக்குடி பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த, ஈஸ்டர் பண்டிகை தினம் நாளை(ஏப்.,5) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று நள்ளிரவு அனைத்து சர்ச்சுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கவுள்ளது.