பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
02:04
ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த பிப்.,18ம் தேதி முதல், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப் பிடித்தனர். கடந்த 3ம் தேதி, புனிதவெள்ளியன்று, தேவாலயங்களில் துக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டு, சிலுவை பாடு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சிலுவையில் மரித்த இயேசு 3ம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஈஸ்டர் பண்டிகை, சென்னை சாந்தோம் தோமையார், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி, பாலவாக்கம் புனித அந்தோணியார், வெட்டுவாங்கேணி சுவக்கீன் அன்னம், லஸ் பிரகாசமாதா, தாம்பரம் பாத்திமா உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும், திருஒளி வழிபாடு நடைபெற்றது. உள்ளங்களை துாய்மைப்படுத்தி, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள சர்ச்களில் நடைபெற்ற திருப்பலிகளிலும், சிறப்பு பிரார்த்தனைகளிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.