ஒரு சமயம் இந்திரன், பிரகஸ்பதியை அவமதித்து விட்டான் அதனால் அவனுக்கு ஆலோசனை கூறுவதை பிரகஸ்பதி நிறுத்தி விட்டார். குருவின் வழிகாட்டுதல் இல்லாததால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்து வந்தான். இதனைக்கண்ட பிரகஸ்பதி, இந்திரனை மன்னித்து மீண்டும் அவனுக்கு நல்வழிகாட்டத் தொடங்கினார். பிரகஸ்பதி இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன், அவரிடமே யோசனை கேட்க, அவர் தீர்த்த யாத்திரை செல்லும்படி ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைப்படி தீர்த்தயாத்திரை மேற்கொண்ட இந்திரன், ஓரிடத்தில் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் உணர்ந்தான். தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவனின் கண்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. காரணத்தை அறிந்தவன், உடனே அங்கு ஒரு கோயிலைக்கட்டி சிவபெருமானை வழிபட்டான். இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி என்றும் கூறுகின்றனர். இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே பின்னர் மதுரை மாநகராயிற்றாம். இன்றும் சித்திரை மாதத்து பவுர்ணமியன்று சிவலிங்கத்தை வழிபட இந்திரன் மதுரை மாநகருக்கு வருவதாக ஐதீகம்.