பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
10:04
கீழ்நல்லாத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரில் உள்ள எல்லையம்மன் கோவிலில் நேற்று, ஜாத்திரை உற்சவம் நடந்தது.முன்னதாக, கடந்த மாதம், 31ம் தேதி, கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், கடந்த 3ம் தேதி, விநாயகருக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 4ம் தேதி, பெருமாள் உற்சவமும் நடந்தது.பின், எட்டியம்மனுக்கு காப்பு கட்டுதலும், எல்லையம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, சுவாமி புறப்பாடும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, விரதமிருந்த பக்தர்கள் அடிதண்டமும், வேப்பஞ்சேலை செலுத்தல் நிகழ்ச்சி நடந்தது.பின், ஜாத்திரை உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பக்கோர்குத்துதல் மற்றும் முள் குத்துதல் நிகழ்ச்சி, பகல் 12:00 மணிக்கு நடந்தது. அதன்பின், மாலை மஞ்சள் நீராடலும்; இரவு, அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது. இன்று இரவு, விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.