பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
டேராடூன்: சார்தாம் யாத்திரை எனப்படும், இமயமலையில் உள்ள, நான்கு இந்து புனித தலங்களின் வழிபாடு, நேற்று முதல் துவங்கியது. காங்கிரசை சேர்ந்த முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான உத்தரகண்ட் மாநிலத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் (கடல் மட்டத்திலிருந்து) அமைந்துள்ளன, கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி அம்மன் கோவில்கள்.பிரசித்தி பெற்ற இந்த கோவில்கள் அமைந்துள்ள பகுதி, ஆண்டின் ஆறு மாதங்கள் பனியால் சூழப்பட்டிருக்கும். இதனால், அந்த மாதங்களில், இந்த நான்கு கோவில்களும் நடை சாத்தப்பட்டிருக்கும். கோடை துவங்கியதை அடுத்து, கடந்த செவ்வாய்கிழமை, கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை கேதார்நாத் சிவன் கோவில் திறக்கப்பட்டது. நேற்று, பத்ரிநாத் விஷ்ணு கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, நான்கு கோவில்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று முதல் தயாராக இருந்தன. இந்த தகவலை நேற்று முறைப்படி அறிவித்த, உத்தரகண்ட் மாநில அரசு, 2013ல் நிகழ்ந்த கேதார்நாத் வெள்ள சோகத்தை மறந்து, பக்தர்கள் தைரியமாக இந்த கோவில்களுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என, தெரிவித்துள்ளது. 2013ல் நிகழ்ந்த சோகம்:கடந்த 2013ல், கேதார்நாத் கோவில் பகுதியில் ஏற்பட்ட பேய்மழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 8,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். இந்திய ராணுவம், பேரிடர் நிர்வாக குழு வீரர்களின் அயராத பணியால், பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.