Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கூரத்தாழ்வான்
ஸ்ரீராமாநுஜரும் கூரத்தாழ்வானும்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமாநுஜரும் கூரத்தாழ்வானும்!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
05:04

பகவத் ராமாநுஜரின் முதன்மைச் சீடர்கள் முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் ஆவார்கள். பகவத்ராமானுஜர் ஆளவந்தாரின் ஆணைப்படி ஸ்ரீபாஷ்யம் எழுதிட, கூரத்தாழ்வான் எவ்வாறு உறுதுணையாக இருந்தார்.  ஆளவந்தாரின் உயிர் பிரிந்த உடலை காவிரிக்கரையில் திருப்பள்ளிபடுத்தும் போது மூன்று விரல்கள் மடங்கிக் கிடந்தன. அதற்கான காரணங்களாக ஆளவந்தாரின் மூன்று மனோரதங்களை (ஆசைகளை) அங்கு வந்த ராமானுஜரிடம் அம்மஹானின் சீடர்கள் கூறினார்கள். ராமானுஜரும் அவருடைய இரண்டாவது ஆசையையும். மூன்றாவது ஆசையையும் சுலபமாகப் பூர்த்தி செய்தார். ஆளவந்தாரின் முதல் ஆசையாக வேதவ்யாஸர் எழுதிய ப்ரஹ்மஸுத்ரத்திற்கு போதாயனார் உரை எழுதியுள்ளார்.

ப்ரஹ்மஸுத்ரத்திற்கு விசிஷ்டாத்வைத மதத்தின்படி ஓர் பாஷ்யம் (விளக்கவுரை) எழுத வேண்டும் என்பதாகும். அதுவே, உடையவர் ஸ்ரீபாஷ்யத்தை சாதித்ததற்குக் காரணமாகும். அதனால் உடையவருக்கு பாஷ்யகாரர் என்ற திருநாமமும் உண்டு. ஆளவந்தாரின் முதல் மனோரதத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஸ்ரீபாஷ்யம் (விளக்கவுரை) எழுதவேண்டும் என்றால் அந்த புத்தகத்தை எடுத்துப் படிப்பதற்காக போதாயன வ்ருத்தி கிரந்தத்தைப் பார்க்க வேண்டும். அந்த காரணத்தை முன்னிட்டு காஷ்மீருக்கு உடையவர். சென்றார். சாரதா பீடத்திற்குச் சென்று போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அங்குள்ளவர்கள் சுலபமாகப் பார்க்க விடவில்லை. ராமாநுஜரை வாதப்போருக்காக அழைத்தனர். வாதப் போரில் எல்லோரையும் வென்றார். ஸரஸ்வதி பீடத்தார் உள்ளம் மகிழ்ந்து. போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை எடுத்துக் கொடுத்தார்.

ராமாநுஜரும் அப்புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார். மேதாவியான ஆழ்வான் எம்பெருமானார் அந்த க்ரந்தத்தைப் பூர்த்தியாகப் பார்ப்பதற்கு முன்பே அனைத்து அத்யாயங்களையும் (பாகங்களையும்) படித்து நெஞ்சில் தேக்கிக் கொண்டார். உடையவர் முதல் அத்யாயம் பார்த்து முடித்தவுடனே. அங்குள்ளவர்களின் தவறான அறிவுரைகளினால் மனம் கலைக்கப்பட்ட தலைவர் அந்தக் க்ரந்த புத்தகத்தைச் சட்டெனப் பிடுங்கி உள்ளே வைத்து விட்டார். ராமானுஜருக்கு மனதில் அபாரமாக வருத்தம் ஏற்பட்டது. ஐயோ! இந்தப் புத்தகத்தை எவ்வளவு சிரமப்பட்டு பெற்றுக் கொண்டு வந்தோம். இதென்ன! நம் கைக்குக் கிடைத்த புத்தகத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறோமே! நாம் ஒரு வைஷ்ணவனா? இனி இந்த வைஷ்ணவத்திற்கு நம்மால் ஒன்றும் பண்ண முடியாது போலிருக்கிறதே! ஆளவந்தாரின் முதல் ஆசையைப் பூர்த்தி பண்ண முடியாது போல இருக்கிறதே! என்று அபாரமாக ராமானுஜர் வருத்தப்பட்டார்.

அன்று வரையில் ராமானுஜர் அப்புத்தகத்தில் உள்ள முதல் அத்தியாயத்தை மட்டும் தான் படித்துப் புரிந்து வைத்திருந்தார். இவ்வளவு நடந்ததையும் கூரத்தாழ்வான் பார்த்துக் கொண்டு இருந்தார். ராமானுஜர் மனவருத்தத்துடன் அழுது கொண்டிருந்தார். ஆழ்வானும் இவ்வருத்தத்தினால் அழுகிறார். இந்த வருத்தத்துடன் ராமானுஜரிடம் மெதுவாக கூரத்தாழ்வான். ஸ்வாமி விரும்பினால் அடியேன் ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறேன் என்றார். ராமாநுஜர் சொல்லவும் என்றார். ஆழ்வான் , ஸ்வாமி! கவலைப்பட வேண்டாம். அப்புத்தகம் போனால் போகட்டும் என்றார். ஸ்வாமிக்குப் புரியவில்லை. இவ்வளவு ச்ரமப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து அதைப் பறிகொடுத்து விட்டோம். இது போனால் போகட்டும் என்று சொல்லலாமா? எனறு ஆழ்வானைப் பார்த்து வினவினார். அதற்கு கூரத்தாழ்வான் மிக அற்புதமாக அடியேன் (நான்) அப்புத்தகத்திலுள்ள அனைத்து பாகங்களையும் படித்து விட்டேன். ஸ்வாமி விரும்பினால் இங்கேயே சொல்கிறேன். அல்லது திருவரங்கம் சேர்ந்த பின்பு விண்ணப்பம் செய்கிறேன் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ராமானுஜர் ஆனந்தப்பட்டார். எவ்வளவு மோதாவிலாஸம் கூரத்தாழ்வானுக்கு. அந்த போதாயன வ்ருத்தி க்ரந்தம் என்பது சிறியது அல்ல. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு பெரிய புத்தகம். பெரிய மேதாவி கூட இதைப் படித்து உணர முடியாது. நமக்குப் பணிவிடையெல்லாம் விரைவாகச் செய்து விட்டு, பயணக்களைப்பையும் பாராது இந்த க்ரந்தத்தைப் படித்திருக்கிறாரே! எவ்வளவு புத்திகூர்மை ஆழ்வானுக்கு என்று ராமானுஜர் பெருமைப்பட்டுக் கொண்டார்.

இவ்வளவு மேதாவிலாஸத்தைப் பெற்றவராக இருந்தும் கூரத்தாழ்வான் அதை வெளியில் காட்டிக் கொண்டது கிடையாது. அவ்வளவு அடக்கம் ஆழ்வானுக்கு. நம் ஆசார்யன் ராமானுஜரால் எழுத முடியாததை நம்மால் எழுத முடியும் என்ற இறுமாப்பு இல்லாதவர் கூரத்தாழ்வான். இத்தனையும் நான் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதே ராமானுஜரின் திருவடி ஸம்பந்தத்தால் தான் என்று நினைத்தவர் கூரத்தாழ்வான் ஆக. நம் ஸம்ப்ரதாயத்திற்கு விசிஷ்டாத்வைத மதத்தின்படி ராமானுஜரின் விளக்கவுரை (ஸ்ரீபாஷ்யம்) கிடைப்பதற்கு முழு முதல் காரணம் கூரத்தாழ்வானே ஆவார். இதனால் ஆழ்வானுடைய சோம்பலின்மையும், அடக்கமும், அபாரமான அறிவும் வெளிப்படுகிறது. இராமாயணத்தில் ராமபிரான் காட்டில் வசித்த பதினான்கு ஆண்டு காலத்திலும், மற்றக் காலத்திலும் இளையபெருமாள் (லக்ஷ்மணர்) ராமபிரானுக்குப் பக்குவமாக அனைத்து கைங்கர்யங்களையும் செய்து வந்தார். அதைப் பார்த்த ராமர் மனம் மகிழ்ந்து, லக்ஷ்மணா குறிப்பறிந்து கார்யம் செய்யவல்ல புத்திசாலியான நீ இருக்கும்போது தந்தையான தசரதச் சக்ரவர்த்தி மரணமடைந்ததாகவே நான் நினைக்கவில்லை என்று லக்ஷ்மணனைக் கொண்டாடினார்.

இந்தப் புத்தத்தில் உள்ள அனைத்தையும் தெரிந்து வைத்துள்ள ஆழ்வான் நம்முடன் இருக்கும்வரை, அந்தப் புத்தகம் நம் கையில் இருப்பதாகவே நினைக்கிறேன் என்று ராமானுஜரும் மகிழ்ந்தார். மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து திருவரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீபாஷ்யம் (ப்ரஹ்மஸூத்ரத்திற்கு விசிஷ்டாத்வைத மதத்தின்படி விளக்கவுரையை எழுதத் தொடங்கினார். ராமானுஜர் எழுத ஆரம்பித்தவுடன் ஆழ்வானை நோக்கி ஆழ்வானே! இந்த விளக்கவுரையை நான் வாயால் சொல்லிக் கொண்டே வருகிறேன். நீர் தான் ஒலையில் அதை எழுதிக் கொண்டு வர வேண்டும். மேலும் நான் வ்ருத்தி க்ரந்த புத்தகத்தை முழுவதும் படிக்கவில்லை. எனவே சில இடங்களில் என்னுடைய விளக்கவுரை அந்தப் புத்தகத்திலிருந்து முரண்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு முரண்படும் பொழுது நீர் என்னிடத்தில் ஸ்ருத்தி க்ரந்தம் இந்த இடத்தில் இப்படியுள்ளது என்று எனக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

இதைக் கேட்ட ஆழ்வான் விளக்கவுரையை எழுதுவது எனக்கு கிடைத்த பாக்யம். ஆனால் ஆசார்யனான ஸ்வாமி தவறு செய்ய வாய்பில்லை. அனைத்தும் அறிந்த ஸ்வாமி இவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். பிறகு ராமானுஜருக்கும் ஆழ்வானுக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ராமாநுஜர் ஆழ்வானைப் பார்த்து, நான் விளக்கவுரையை சொல்லிக் கொண்டே வருகிறேன் நீர் எழுதிக் கொண்டு வாரும், போதாயன வ்ருத்திக்கு ஒத்திருக்க வில்லையென்றால் எழுதாமல் நிறுத்திக் கொள்ளவும். அதை நான் புரிந்து கொள்கிறேன் என்று கூறினார். இதில் கூறியபடி ஒரு இடத்தில் ஆழ்வான் எழுதுவதை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்தும் பொழுது ராமானுசர் அதைப் புரிந்து கொண்டு இன்றைக்கு எழுதியது போதும், பிறகு தொடருவோம் என்று கூறினார். பிறகு ராமானுஜர், சொல்ல வந்த வாக்யத்தை அலசி ஆராய்ந்து விட்டு சரியான வாக்யங்களைக் கொண்டு விளக்கவுரையைத் தொடர, ஆழ்வான் எழுதி நிறைவு செய்தார்.

இவ்வாறே ராமானுஜருடன் கூரத்தாழ்வானும் சேர்ந்து பாஷ்யம் எழுதி முடித்தார்கள், தனக்கு உறுதுணையாக இருந்த ஆழ்வானை நினைத்து இளைய பெருமாளை எம்பெருமான் ராமன் கொண்டாடினாப் போல, ஆழ்வான் நீர் இருக்கும் பொழுது ஆளவந்தார் மறைந்ததாக நான் நினைக்கவில்லை என்று ராமானுஜர் மகிழ்ந்து கொண்டாடினார். ஆளவந்தாரிடம் இருந்த அனைத்து ஞானமும் ஆழ்வானிடம் உள்ளது என்று கொண்டாடினார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar