திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் குண்டு வெடிப்பு:குளத்தை தூர்வாரிய போது அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2015 03:04
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் குளத்தில் துார்வாரிய போது குண்டு வெடித்தது. இச் சம்பவம் பற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் தங்க நகைகளின் பொக்கிஷம் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுஉள்ளது. கோயிலை சுற்றி பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் கிணறு தோண்டுவது மற்றும் கட்டுமான பணிகள் நடத்த முறையான பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்த கோயிலில் பத்மதீர்த்த குளம், ஸ்ரீபாதகுளம் உட்பட மூன்று தெப்பக்குளங்கள் உள்ளன . இதில் ஸ்ரீபாதகுளத்தை துார்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒரு தொழிலாளி மண்வெட்டியால் வெட்டிய போது பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. யாரும் காயம் அடையவில்லை. அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் குளத்தின் உள்ளே இறங்கி ஐந்து பைப் வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.குளத்துக்குள் இந்த குண்டுகள் எப்படி வந்தது என்பது பற்றி அறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. பாலசுப்பிரமணியன் கூறினார். தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் கூறுகையில், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை அமலில் உள்ள நிலையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பில் குளறுபடிகள் உள்ளதா என்பது ஆராயப்படும்.தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.பொக்கிஷம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பத்மநாபசுவாமி கோயில் குளத்தில் குண்டு வெடித்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.