பதிவு செய்த நாள்
06
மே
2015
01:05
விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகள் விழாவில், அரசு தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், திருநங்கைகள் அதிருப்தியடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த விழாவில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பது வழக்கம். கோவில் அமைந்துள்ள இடம் கிராமமாக இருப்பதால், பெரும்பாலான திருநங்கைகள், விழுப்புரத்தில் ரூம் எடுத்து தங்கி, விழாவில் கலந்து கொள்வர். இரு தினங்களுக்கு முன்பாகவே திருநங்கைகள் குவிந்து விடுவதால், விழுப்புரம் களை கட்டத் துவங்கிவிடும். திருநங்கைகளை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும், மிஸ் கூவாகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 3ம் தேதியன்று, திருநங்கைகள் சார்பில், கலை விழாவும், நேற்று முன்தினம்(4ம் தேதி) மிஸ் கூவாகம் போட்டியும் நடத்தப்பட்டது.
கலைவிழாவில், சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன், கலெக்டர் சம்பத் ஆகியோர் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் கலந்து கொள்ளவில்லை. விழுப்புரத்தில் உள்ள, கலைஞர் அறிவாலயத்தில் நடந்த, மிஸ் கூவாகம் போட்டியில், கலெக்டர் சம்பத், எஸ்.பி., நரேந்திரன்நாயர் கலந்து கொள்வர் என, அறிவிக்கப்பட்டிருந்தும், அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. இரு விழாக்களிலும், அரசு தரப்பில் யாரும் பங்கேற்காததால், திருநங்கைககள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசியல் காரணமா: ராஜ்யசபாவில், திருநங்கைகளுக்கான தனிநபர் மசோதாவை, திருச்சி சிவா(தி.மு.க) தாக்கல் செய்து, விழுப்புரத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டதால், அவரை திருநங்கைகள் பாராட்டினர். மிஸ் கூவாகம் போட்டி, தி.மு.க.,வுக்கு, சொந்தமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. முற்றிலுமாக தி.மு.க.,வை முன்நிறுத்தி, விழா நடத்தப்பட்டதாக, அரசு தரப்பில் கருதியதால், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லையா என, திருநங்கைகள் கேள்வி எழுப்பினர்.