நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலூர் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று (8ம் தேதி) தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கடந்த 4ம் தேதி பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை அழைத்து வருதல் நடந்தது. 5ம் தேதி மதியம் 3:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்து, இரவு 8:00 மணிக்கு திரவுபதியம்மன், அர்சுனன், கிருஷ்ணன், பொன்னியம்மன் வீதியுலா நடந்தது. பின்னர் 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு திரவுபதியம்மன், அர்சுனன் திருக்கல்யாணம் நடந்து முத்துப் பல்லாக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தீ மிதி விழாவையொட்டி, நேற்று (8ம் தேதி) காலை 9:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.