பதிவு செய்த நாள்
12
மே
2015
11:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வடபத்ரசயனர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராஜகோபுரத்தில் இருந்த ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகளுக்கு தங்க வர்ணம் பூசப்பட்ட நிலையில், அச்சிலைகள், இரு நாட்களுக்கு முன் திடீரென அகற்றப்பட்டு உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர், வடபத்ரசயனர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ளது. இங்கு, வரும், 22ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
2000ல் கும்பாபிஷேகம்: கடந்த, 2000ல், கும்பாபிஷேகம் நடந்தபோது, ராஜகோபுரத்தின் முதல்நிலை அருகில் ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 15 ஆண்டுகளாக இருந்த சிலைகள், இரு நாட்களுக்கு முன் திடீரென அகற்றப்பட்டுள்ளன. இது, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பணி கமிட்டி முன்னாள் உறுப்பினர் முத்துபட்டர் கூறியதாவது: வடபத்ரசயனர் சன்னிதி ராஜகோபுரத்திற்கு முன் நுழைவாயிலில், 11 அடி உயரத்தில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் இருந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி இச்சிலைகளுக்கும் தங்க வர்ணம் பூசப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன், இச்சிலைகள் கோவில் நிர்வாகத்தால் அகற்றி, உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவ கோவிலில் திருமண், சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்நயேர் தான் சின்னமாகும். அப்படியிருக்கும் போது கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது, பக்தர்களுக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது. அச்சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆகம விதிப்படி...: கோவில் செயல் அலுவலர் ராமராஜா கூறியதாவது: தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகள், ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை என புகார்கள் வந்தன. அதனால் தான் சிலைகள் அகற்றப்பட்டன. மீண்டும் சிலை வைக்க வேண்டும் என்றால், அரசிடம் தான் அனுமதி பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.